R ARIVANANTHAM
Double Tuckerr, a Tamil movie with Animation characters in Kollywood cinema will rekindle Cartoons in Tamil, said its joint producer Chandru. Teaser of the film directed by Meera Mahadhi to hit cinemas on March 1 in theatres was released in the presence of Mysskin.
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு பேசியதாவது…
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் நான் அதற்கு முன்னர் ஒரு டீசர் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். ஏனென்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எந்த கோணத்தில் படத்தை அணுகுகிறீர்களோ, ஆடியன்ஸும் அதே மனநிலையில் தான் அப்படத்தை அணுகுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. மேலும் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதுகின்ற எழுத்து தான் அப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்றும் நம்புகிறேன். ஒரு மூன்று வருடத்திற்கு முன்பு அவ்வளவு தான் இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று எண்ணிக் கொண்டு, என் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருந்த போது ஒரு கை வந்து என்னைத் தூக்கியது. அது தீரஜ்ஜின் கை. அவர் தான் என்னை முதன்முதலில் திரைக்கதைக்குள் வாருங்கள் என்று அழைத்துப் போனார். அப்படி என்னைக் கைப்பற்றி அழைத்து இன்று இங்கே கூட்டி வந்து விட்டுவிட்டார். மூன்று வருடங்களாக திரைக்கதையில் உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
- “ஆண்கள் அழுவது அழகோ அழகு” – ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்
- ”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு
- ”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி
- ”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்
- “சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – மிஷ்கின்
அந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள்; பி.எம்.டபிள்யூ, கார் வாங்கலாம். ஆடி கார் வாங்கலாம். ஆனால் அதற்கான எரிபொருள் என்பது எப்போதும் பிரஸ் அண்ட் மீடியாவாகிய நீங்கள் தான். ஏனென்றால் உங்கள் எழுத்திற்குத் தான் ஆடியன்ஸை தியேட்டருக்குள் அழைத்து வரும் வல்லமை இருக்கிறது. அதனால் இப்படத்தினை சப்போர்ட் செய்யுங்கள். .
நம் வீடுகளில் ஒரு வழக்கம் இருக்கும். குழந்தைகள் டிவியில் ஆங்கில கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் தமிழ் கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தால் உடனே மாற்றிவிடுவோம். ‘டபுள் டக்கர்’ படம் வெளியானதும், இந்த நிலை மாறும். தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும் என்று நம்புகிறேன். இது போன்ற கார்ட்டூன் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் புது முயற்சிகளை துணிந்து நாங்கள் செயல்படுத்துவோம்.
படத்தொகுப்பாளர் வெற்றிவேல் பேசும் போது…
இது நான் எடிட்டராக பணியாற்றும் முதல் படம். அஸிஸ்டெண்ட் ஆக பணியாற்றும் போது அங்கு கூட்டத்தில் நின்று மேடையைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. ‘டபுள் டக்கர்’ ஒரு அனிமேஷன் திரைப்படம். எனக்கு காட்சிகள் Empty Plates ஆகத் தான் வரும். அதைக் கொண்டு காட்சிகளை எடிட் செய்வது சவால் நிறைந்தது. இந்த வார்த்தை எல்லோரும் சொல்லக் கூடியது தான். ஆனால் படம் பார்க்கும் போது அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு என் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசும் போது…
இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு சார் அவர்களுக்கு நன்றி. அவர் மிகவும் அமைதியானவர்., ஆனால் எங்கள் ஹீரோ தீரஜ் அப்படியே நேர் எதிரானவர். அவர் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். எங்கள் இயக்குநர் மீரா மஹதி எவ்வளவு கூலான இயக்குநர் என்பதை அந்த வீடியோவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். முழு படப்பிடிப்பையும் எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் கலகலப்பாக கொண்டு போனார். எங்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் என்னை மிக அழகாக காட்டியதோடு மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நான் சிறப்பாக நடிப்பதற்கும் உதவியாக இருந்தார். கோவை சரளா மேடம் போன்ற சீனியர் நடிகைகளுடன் நடித்த அனுபவம் அலாதியானது. நிறைய கற்றுக் கொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் வித்யாசாகர் இசைக்கு மிகப்பெரிய விசிறி. என் படத்திற்கு அவர் இசையமைப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்., எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகில் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிகை நண்பர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. எங்கள் படத்திற்கு மிகச்சிறந்த ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும் போது…
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன்.
ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை.
மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார்.
ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் சொல்வதைத் தான் நம்புவார்கள். ‘டபுள் டக்கர்’ படத்தைப் பற்றி எழுதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…
காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட். என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.
ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான்.
என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன்.
அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.
இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்.. ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.
தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…
என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள். இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவ் ஆன விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். ‘பிள்ளையார் சுழி’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார். ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். உடனே சரி கண்டிப்பாக நாம் இதை பண்ணுகிறோம் என்று சொன்னேன்.
என்னுடன் நடித்த ஸ்மிருதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு நன்றி. இன்னொரு விழாவை அவருக்காகவே முன்னெடுக்க இருக்கிறோம். எடிட்டர் வெற்றிக்கு நன்றி. அட்லி அங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மீரான் இங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.